செய்திகள்

சத்ருகன்சின்கா அரசியலை விட்டு விலகுவது நல்லது - பீகார் துணை முதல்வர் சொல்கிறார்

Published On 2019-03-25 08:41 GMT   |   Update On 2019-03-25 08:41 GMT
சத்ருகன்சின்கா அரசியலை விட்டு விலகுவது நல்லது என்று பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி கூறி உள்ளார். #LSPolls #ShatrughanSinha
பாட்னா:

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சத்ருகன்சின்கா எம்.பி.யாக தேர்வானார்.

ஆனால் அதன் பிறகு அவருக்கும், பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக பிரதமர் மோடியை அவர் மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சத்ருகன்சின்கா பெயர் மீண்டும் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பாட்னா தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடிகர் சத்ருகன்சின்கா காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சத்ருகன்சின்காவை பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் சத்ருகன்சின்கா தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையில் சத்ருகன்சின்காவை கிண்டல் செய்து பீகார் துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

நடிகர் சத்ருகன் சின்கா அரசியலில் உச்சத்துக்கு வந்ததே பா.ஜனதாவை வைத்துதான். ஆனால் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல பா.ஜனதாவை மிக கடுமையாக சத்ருகன் சின்கா சேதப்படுத்தி விட்டார். கட்சிக்கு அவர் அப்படி துரோகம் செய்திருக்கக்கூடாது.

மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கை போய் விட்டது. அதோடு அவருக்கு வயதும் அதிகரித்து விட்டது. எனவே சத்ருகன்சின்கா உடனடியாக அரசியலை விட்டு விலகி செல்வது நல்லது.

பாட்னா தொகுதியில் அவர் களம் இறங்கினால் அவருக்கு ஆதரவாக பூத் ஏஜெண்டுக்கு கூட ஆள் கிடைக்காது. பாட்னா பா.ஜனதாவின் கோட்டையாகும். அங்கு சத்ருகன்சின்காவின் சித்து வேலைகள் எடுபடாது.
 
இவ்வாறு சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். #LSPolls #ShatrughanSinha
Tags:    

Similar News