செய்திகள்

இந்த முறை எல்லா கணக்கையும் தீர்த்து விடலாம் - பாகிஸ்தானுக்கு மோடி மறைமுக எச்சரிக்கை

Published On 2019-02-23 11:04 GMT   |   Update On 2019-02-23 12:17 GMT
ராஜஸ்தானில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, எல்லைப்பகுதியில் உள்ள வீரர்கள் மீதும் மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். உரிய நேரத்தில் எல்லா கணக்கையும் தீர்த்து விடலாம் என குறிப்பிட்டார். #Peacenotpossible #Modi
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததை குறிப்பிட்டு பேசிய மோடி, பயங்கரவாதம் தொடரும்வரை உலகில் அமைதி நிலவும் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் பலத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். இன்று பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட மனநிலை உருவாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமும் உங்களுடன் உள்ளது என்று புல்வாமா தாக்குதலில் தங்களது உறவினரை இழந்து தவிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு நான் உறுதி அளிக்கிறேன்.



நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். பவானி மாதா மீது நம்பிக்கை வையுங்கள். மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம்.

இவ்வாறு அவர் பேசினார். #Peacenotpossible #ifterrorismcontinues #Peaceintheworld  #Modi
Tags:    

Similar News