செய்திகள்

பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் சந்திப்பு - பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டுப் பிரகடனம்

Published On 2019-02-18 10:31 GMT   |   Update On 2019-02-18 11:21 GMT
பிரதமர் மோடியை இன்று சந்தித்த அர்ஜென்டினா அதிபர் முன்னிலையில் 10 புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. பயங்கரவாதத்துக்கு எதிராக இருநாட்டு தலைவர்களும் கூட்டுப் பிரகடனம் வெளியிட்டனர். #MauricioMacri #Modi #Pulwamaattack #tacklingterror
புதுடெல்லி:

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அர்ஜென்டினா அதிபர் மவுரிகியோ மக்ரி டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பின்னர், வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே மற்றும் இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இருநாடுகளுக்கும் இடையில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, அணுஎரிசக்தி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

பின்னர், இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினர். அப்போது பேசிய மோடி, ‘பயங்கரவாதத்தை தூண்டிவிடும் சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் முடிந்து விட்டது என்பதை சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் நமக்கு காட்டியுள்ளது.

பயங்கரவாதம் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது உலகநாடுகள் ஒன்றிணைந்து திடமான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை செய்வதில் நாம் காலம் தாழ்த்தினால் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அது அமைந்துவிடும்’ என்று குறிப்பிட்டார்.

அவரது கருத்தை வழிமொழிந்த அர்ஜென்டினா அதிபர், பயங்கரவாதத்தை வேரறுக்க ஒருமித்த முடிவுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வகையிலான பயங்கரவாத தாக்குதலையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மனிதத்துக்கு எதிரான இந்த பயங்கரவாத தீமையை எதிர்த்து உங்களுடன் ஒன்றிணைந்து போராடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். #MauricioMacri #Modi #Pulwamaattack #tacklingterror 
Tags:    

Similar News