செய்திகள்

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பார்வையாளர்களை கவர்ந்த அலங்கார ஊர்திகள்

Published On 2019-01-26 05:56 GMT   |   Update On 2019-01-26 05:56 GMT
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகள், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. #RepublicDay #TableauxShowcase
புதுடெல்லி:

நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு, தேசியக்கொடியை ஏற்றிவைத்து, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

பின்னர் மறைந்த லான்ஸ் நாயக் நசீர் அகமது வாணிக்கு அசோக் சக்ரா விருதினை, அவரது மனைவி மற்றும் தாயிடம் ஜனாதிபதி வழங்கினார்.

இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படை வீரர்கள் மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்து வந்தனர். முதல் முறையாக பாவனா கஸ்தூரி என்ற பெண் அதிகாரி தலைமையில் ராணுவ வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.  அதிநவீன டி90 பீஷ்மா ரக டாங்கி மற்றும் கே 9, வஜ்ரா-டி பீரங்கிகள் உள்ளிட்டவை அணிவகுப்பில் பங்கேற்றன.

ராணுவ அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை விளக்கும் வகையிலான, அலங்கார வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. 



இதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது. மதுரையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த அலங்கார ஊர்தியில், மகாத்மா காந்தியின் தமிழக வருகையை குறிக்கும் வகையில் அவரது சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது. மதுரையில் உள்ள ஏழைகளை பார்த்து, அவர்களைப் போன்றே எளிய உடைக்கு காந்தி மாறிய தகவலும் இந்த ஊர்தியில் இடம்பெற்றிருந்தது. இதுதவிர,  மதுரை மீனாட்சியம்மன் கோவில், உழவர்கள் எளிய ஆடையுடன் ஏர் உழும் காட்சியும் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. #RepublicDay #TableauxShowcase

Tags:    

Similar News