செய்திகள்

மேகதாது விவகாரம்- தமிழக அரசு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம்

Published On 2019-01-22 07:35 GMT   |   Update On 2019-01-22 07:55 GMT
மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SC #MekedatuDam
புதுடெல்லி:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்து இருந்தது.

இந்த அனுமதிக்கு தடை கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

மேலும் மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்தது.

இந்த மனுக்கள் கடந்த டிசம்பர் 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உத்தரவிட்டு இருந்தது.


இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு கடந்த 4-ந் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில் “தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரி இருந்தது.

மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் “கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்க நிபந்தனையின் பேரில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மத்திய அரசும் 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. #SC #MekedatuDam
Tags:    

Similar News