செய்திகள்

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு

Published On 2019-01-19 08:42 GMT   |   Update On 2019-01-19 08:42 GMT
ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் பனிப்பொழிவின் காரணமாக விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார். #JKSnowfall #SrinagarAirport
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இன்று அதிகாலை முதலே பனிமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. கட்டிடங்களின் மேற்கூரை, வாகனங்கள் என அனைத்தும் பனி மூடிக் காணப்படுகின்றன. பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று காலை முதல் கண்ணை மறைக்கும் அளவிற்கு பனிப்பொழிவு இருந்ததால், விமானங்கள் ஏதும் இயக்கப்படவில்லை. வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் விமானங்கள் இயக்கப்படலாம் என்று அதிகாரி கூறினார். மேலும் இந்த மாதத்தில் ஸ்ரீநகரில் மூன்றாவது முறையாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

இதற்கிடையில்,  நாளை முதல் அடுத்த மூன்று நாட்களில் கடும் பனிப்பொழிவு மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கினையும், நாட்டின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் ஒரே தேசிய நெடுஞ்சாலையில் பனிப்பொழிவு இருப்பதால் ஒரு வழி போக்குவரத்துக்கு மாற்றப்பட்டது. அதே நேரத்தில் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர்-லே மற்றும் பிற சாலைகள் மூடப்பட்டன. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை முதல் ஜவஹர் சுரங்கப்பாதை, ஷைத்தான நல்லாஹ் மற்றும் பானிஹால் ஆகிய இரு பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகம் இருந்தது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏற்கனவே சனிக்கிழமையிலிருந்து கடுமையான பனிப்பொழிவு காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது . இதற்கிடையில், காஷ்மீருடன் லடாக்கின் பிராந்தியத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையானது பனிப்பொழிவு காரணமாக இரண்டு மாதங்கள்  மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #JKSnowfall #SrinagarAirport

Tags:    

Similar News