செய்திகள்

பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது சரியல்ல: எடியூரப்பா

Published On 2019-01-14 02:10 GMT   |   Update On 2019-01-14 02:10 GMT
முதல்-மந்திரி குமாரசாமியை தவறாக பேசி விட்டதாக கூறி பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எடியூரப்பா கூறியுள்ளார். #BJP #Yeddyurappa
பெங்களூரு :

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரி குமாரசாமியை, ஒரு உதவியாளர் போல காங்கிரஸ் நடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லியில் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் தான் மகிழ்ச்சியாக இல்லை, பாராளுமன்ற தேர்தல் வரை பொறுமையாக இருக்கும்படி தேவேகவுடா கூறியதால் அமைதி காத்து வருகிறேன் என்று முதல்-மந்திரி குமாரசாமி சொல்லி இருந்தார். குமாரசாமி சொல்லியதை தான் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர் உண்மையை மறைத்தோ, திரித்தோ கூறவில்லை.

காங்கிரஸ் தலைவர்கள் நெருக்கடி கொடுப்பதாகவும், சுயமாக முடிவு எடுக்கவில்லை, காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதை கேட்டு தான் நடக்க வேண்டும் என்று குமாரசாமியே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தார். அதனை தான் பிரதமர் கூறி இருக்கிறார். ஆனால் முதல்-மந்திரி குமாரசாமியை தவறாக பேசி விட்டதாக கூறி பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது சரியல்ல. ஏதோ யூகத்தின் அடிப்படையில் குமாரசாமி பற்றி பிரதமர் கூறவில்லை. பிரதமருக்கு எதிராக பேசுவதை காங்கிரஸ் தலைவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். #BJP #Yeddyurappa
Tags:    

Similar News