செய்திகள்

சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை - உத்தவ் தாக்கரே ஆவேசம்

Published On 2019-01-13 10:44 GMT   |   Update On 2019-01-13 10:58 GMT
பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் பாஜக அடித்து வீழ்த்தி வெற்றிபெறும் என்ற அமித் ஷாவின் கருத்துக்கு உத்தவ் தாக்கரே காரசாரமாக பதில் அளித்துள்ளார். #trounceSena #UddhavThackeray
மும்பை:

பாராளுமன்ற தேர்தலில் எங்களிடம் கூட்டணி அமைத்தால் அவர்களின் வெற்றிக்கு பாஜக உத்தரவாதம் அளிக்கும். அதேவேளையில் கூட்டணி அமையாவிட்டால் முன்னாள் கூட்டணி கட்சி என்றுகூட பார்க்க மாட்டோம். அவர்களையும் அடித்து வீழ்த்தி பாஜக வெற்றிபெறும் என சமீபத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துக்கு இன்று பதிலளித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எங்களை தோற்கடிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மும்பை வோர்லி பகுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

பழைய கூட்டணி கட்சி என்றுகூட பார்க்காமல் அடித்து வீழ்த்துவோம் என்று யாரோ சிவசேனாவை குறிப்பிட்டு கூறியுள்ளனர். சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை என்பதை அவர்களுக்கு தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.


அரசியல் பயணத்தில் மோடி அலையைப்போல் எத்தனையோ அலைகளை சிவசேனா சந்தித்து விட்டது. ராமர் கோவில் விவகாரத்தை தேர்தல் காலத்து ஆயுதமாக பயன்படுத்துபவர்கள் நாங்களல்ல. அப்படி செய்பவர்களை அம்பலப்படுத்துவதற்காகவே நாங்களும் தேர்தலின்போது ராமர் கோவில் பிரச்சனையை எழுப்புகிறோம்.

ராமர் கோவில் கட்டுவதை காங்கிரஸ் தடுப்பதாக இந்த அரசு கூறுகிறது. அதற்கான தண்டனையை கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்கி விட்டனர். ஆனால், பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் நிதிஷ் குமார், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரை கூட்டணியில் வைத்துகொண்டு எப்படி ராமர் கோவில் கட்டப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பாஜக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #trounceSena #UddhavThackeray
Tags:    

Similar News