செய்திகள்

10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது - அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்

Published On 2019-01-09 11:46 GMT   |   Update On 2019-01-09 11:46 GMT
10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #navaneethakrishnan #parliament #10percentreservation
புதுடெல்லி,

பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் நேற்று தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி நவநீதிகிருஷ்ணன் பேசியதாவது:-

10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நரசிம்மராவ் ஆட்சியில் 10% இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது ஏற்கனவே நீதிமன்றம் தடைவிதித்தது. இடஒதுக்கீடு என்பது தனிப்பட்ட நபருக்கு இல்லாமல் சாதிவாரியாகத்தான் இருக்க வேண்டும். தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு கொண்டுவர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

பொருளாதார அடிப்படையிலான இந்த மசோதாவை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. எந்தவொரு ஆவணமும் கணக்கெடுப்பும் இல்லாமல் மத்திய அரசு 10% இடஒதுக்கீட்டை கொண்டு வருகிறது என்றார். 

இதனையடுத்து பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு செய்தது. #navaneethakrishnan #parliament #10percentreservation
Tags:    

Similar News