செய்திகள்

நடிகை மவுஸ்மி சட்டர்ஜி பா.ஜனதாவில் சேர்ந்தார்

Published On 2019-01-03 10:02 GMT   |   Update On 2019-01-03 10:02 GMT
பழம் பெரும் இந்தி நடிகை மவுஸ்மி சட்டர்ஜி டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். #MoushumiChatterjee
புதுடெல்லி:

பழம் பெரும் இந்தி நடிகை மவுஸ்மி சட்டர்ஜி. கொல்கத்தாவில் பிறந்த இவர் 1960 மற்றும் 1970- களில் பாலிவுட்டை கலக்கியவர். இதே போல் பெங்காலி மொழியிலும் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மவுஸ்மி சட்டர்ஜி பிரபல இந்தி நடிகர்களான ராஜேஷ் கன்னா, சசிகபூர், ஜிதேந்திரா ஆகியோருடன் நடித்துள்ளார். 70 வயதான அவர் தற்போது மும்பையில் கணவர் ஜெயந்த் மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மவுஸ்மி சட்டர்ஜி டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். மேற்கு வங்காள பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முகுல்ராய், பா.ஜனதா பொதுச் செயலாளர் கைலாஷ், விஜய் வராகியா ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவை பலப்படுத்த விரும்புவதாக மவுஸ்மி சட்டர்ஜி தெரிவித்தார்.

மவுஸ்மி 2004 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தா வடகிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.

2019 பாராளுமன்ற தேர்தலில் மவுஸ்மி பா.ஜனதா சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MoushumiChatterjee
Tags:    

Similar News