செய்திகள்

ஆதார் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் - எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

Published On 2019-01-02 23:34 GMT   |   Update On 2019-01-02 23:34 GMT
ஆதார் சட்ட திருத்த மசோதா நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். #Aadhaar #AmendmentBill #LokSabha
புதுடெல்லி:

சமையல் கியாஸ் மானியம் உள்ளிட்ட அரசின் மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்த மத்திய அரசு, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும், செல்போன் இணைப்பு போன்றவற்றுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் அறிவித்தது. ஆதார் அட்டையில் தனிநபர்கள் பற்றிய விவரம் அடங்கி இருப்பதால், அவை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும் என்றும், அரசின் சலுகைகளை பெற ஆதார் அவசியம் என்றும், ஆனால் செல்போன் இணைப்பு, நீட் தேர்வு, வங்கி கணக்குக்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல என்றும், கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களை பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், ஆதார் சட்ட திருத்தம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார். தனிநபர்கள் தாங்களாக விரும்பி செல்போன் இணைப்பு, வங்கி கணக்கு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் பேசுகையில், இந்த மசோதா சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது என்பதால் உடனே வாபஸ் பெறவேண்டும் என்றார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராயும், இந்த சட்ட திருத்த மசோதா சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறினார்.

உறுப்பினர் என்.கே.பிரேமசந்திரன் (புரட்சி சோசலிஸ்டு) பேசுகையில், இந்த மசோதா தனிநபர்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

அதற்கு மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளிக்கையில், இந்த மசோதா சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு விரோதமானது அல்ல என்றும், தனிநபர்களின் உரிமை பறிக்கவில்லை என்றும் கூறினார்.

அரசின் நேரடி மானிய திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதால் ரூ.90 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டு இருப்பதாகவும், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்றவை ஆதார் அட்டை திட்டத்தை வரவேற்று இருப்பதாகவும் அவர் அப்போது அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே மாநிலங்களவையில் உள்துறை ராஜாங்க மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி நிலவரப்படி இந்தியாவில் 122 கோடியே 90 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களில் 6 கோடியே 71 லட்சம் பேர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றும், 29 கோடியே 2 லட்சம் பேர் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அப்போது அவர் கூறினார்.  #Aadhaar #AmendmentBill #LokSabha 
Tags:    

Similar News