செய்திகள்

கம்ப்யூட்டர்களை கண்காணிக்க அதிகாரம் வழங்கப்பட்ட 10 அமைப்புகளும் நினைத்தபடி செயல்பட முடியாது - மத்திய அரசு

Published On 2018-12-30 22:30 GMT   |   Update On 2018-12-30 22:30 GMT
கம்ப்யூட்டர்களை கண்காணிக்க அதிகாரம் வழங்கப்பட்ட 10 அமைப்புகளும் தாங்கள் நினைத்தபடி செயல்படுவதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க சி.பி.ஐ., உளவு அமைப்பு (ஐ.பி.), போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, அமலாக்க இயக்குனரகம், மத்திய நேரடி வரிகள் வாரியம் உள்பட 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. கண்காணிப்பு நிலையை மத்திய அரசு பிரகடனம் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், இந்த 10 அமைப்புகளும் தாங்கள் நினைத்தபடி செயல்படுவதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “கம்ப்யூட்டர்களை கண்காணிக்க, அதில் நடத்தப்படுகிற தகவல் பரிமாற்றத்தை இடைமறிக்க 10 அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் புதிய சட்டம் இயற்றவில்லை. புதிய விதிகளை உருவாக்கவில்லை. புதிய நடைமுறைகள் கிடையாது. நினைத்தபடி செயல்பட அதிகாரம் வழங்கவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

10 அமைப்புகளும், முறைப்படி முன்கூட்டியே அனுமதி பெற்றுத்தான் செயல்பட முடியும். மேலும், மத்திய அரசு வெளியிட்ட ‘கெசட்’ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 10 அமைப்புகளும், மின்னணு தகவல் தொடர்புகளை இடைமறிப்பதற்கு 2011-ம் ஆண்டு முதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 
Tags:    

Similar News