செய்திகள்

ரூ.50 ஆயிரம் கோடி அரசு நிலத்தை சோனியா, ராகுல் அபகரித்துவிட்டனர் - பாஜக குற்றச்சாட்டு

Published On 2018-12-22 10:25 GMT   |   Update On 2018-12-22 10:25 GMT
டெல்லியில் பத்திரிகைக்காக சலுகை விலையில் அளிக்கப்பட்ட 50 ஆயிரம் கோடி ரூபாய் அரசு நிலத்தை சோனியாவும் ராகுல் காந்தியும் அபகரித்து விட்டதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். #NationalHerald #RahulGandhi #SoniaGandhi
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 90.25 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருந்தது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தி அந்த நிறுவனத்தை கையகப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் முன்னர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோராவுக்கு எதிராக வருமான வரித்துறையினர் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கை தடைகோரி மேற்கண்ட நபர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதவிர, கடந்த 1962-63 ஆண்டுவாக்கில்  காங்கிரஸ் கட்சிக்காக நேஷனல் ஹெரால்டு என்ற பெயரில் பத்திரிகை நடத்துவதற்கு டெல்லியில் உள்ள பகதூர் ஷா ஜாபர் மார்க் பகுதியில் உள்ள 5-A எண் கொண்ட காலிமனையில் சுமார் 14650 சதுரடி பரப்பளவு கொண்ட அரசுக்கு சொந்தமான நிலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு ஒதுக்கப்பட்டது.



நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் நிர்வாகம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்திடம் இருந்து யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த பத்திரிகை வெளிவருவது நின்றுபோன பின்னர் அரசு ஒதுக்கீடு செய்த மேற்கண்ட நிலத்தில் உள்ள 5 மாடி கட்டிடடத்தில் 4 மாடிகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.  யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த சொத்தின் மூலம் பல கோடி ரூபாய் வாடகை சம்பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துக்களை ஒப்பந்த விதிகளை மீறி, முறைகேடாக கையகப்படுத்தியதாக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைதொடர்ந்து, அந்த இடத்தை மத்திய அரசை சேர்ந்த அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு செய்தனர். பத்திரிகை அச்சடிப்பதற்காக தரைதளத்தில் வைக்கப்பட்டிருந்த அச்சு இயந்திரம் அகற்றப்பட்டிருந்தது.

அச்சடிக்க தேவையான தாள்களும் அங்கு கையிருப்பில் இல்லை. நிர்வாக அலுவலகங்கள் இயங்கிவந்த நான்குமாடி பகுதிகளிலும் பத்திரிகை நிர்வாகம் தொடர்பான பணிகள் ஏதும் நடைபெறவில்லை. எனவே, பத்திரிகை நடத்துவதற்காக என்று ஒதுக்கீடு செய்த அரசு நிலம் முறைகேடாக, தகாத முறையில் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதுதொடர்பாக, விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு சார்பில் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பரில் அனுப்பப்பட்ட இரு நோட்டீஸ்களுக்கு தகுந்த பதில் வரவில்லை என மத்திய புறநகர் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் தெரிவித்தது.

எனவே, அந்த இடத்தை காலிசெய்து அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு கடந்த அக்டோபர் மாதம்  யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த உத்தரவை எதிர்த்து மேற்படி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த இடத்தை காலிசெய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக காங்கிரஸ் கட்சி தலைமை இன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  பத்திரிகைக்காக சலுகை விலையில் அளிக்கப்பட்ட 50 ஆயிரம் கோடி ரூபாய் அரசு நிலத்தை சோனியாவும் ராகுல் காந்தியும் அபகரித்து விட்டதாக மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவிசங்கர் பிரசாத், விலைமதிப்பு மிக்க பொதுச்சொத்து சோனியா, ராகுல் காந்தி மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் எப்படி முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை டெல்லி ஐகோர்ட் தனது தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தி விட்டது.

இதுதொடர்பாக, நடந்த தில்லுமுல்லுகளையும் இந்த தீர்ப்பு தோலுரித்து காட்டி, விமர்சனமும் செய்துள்ளது. அந்த இடத்தை அபகரிப்பதில் மிகப்பெரிய முறைகேடுகளில் ஈடுபட்ட சோனியா மற்றும் ராகுல் காந்தியின் நடவடிக்கைகளை கேள்விக்குரிய செயலாக கோர்ட் கருதுகிறது.

நிலைமை இப்படி இருக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விவகாரம் தொடர்பாக எங்களை கேள்வி கேட்கிறார். ரபேல் விவகாரம் தொடர்பாக  விசாரிக்க ஏதுமில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பிறகும் அவர் கேள்வி எழுப்பி வருகிறார்.

ராகுலுக்கும் சோனியாவுக்கும் நாங்கள் முன்வைக்கும் கேள்வி டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு பதில் கூறுங்கள் என்பதுதான். அரசு ஒதுக்கீடு செய்த சுமார் 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஒரு குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது எப்படி என்பது தொடர்பாக நீங்கள் இந்த நாட்டுக்கு பதிலளிக்க வேண்டும் என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். #NationalHerald #RahulGandhi #SoniaGandhi
Tags:    

Similar News