செய்திகள்

தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி

Published On 2018-12-18 16:57 GMT   |   Update On 2018-12-18 16:57 GMT
தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalanisamy #PMModi #AiimsHospital
சென்னை:

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது கடந்த 2014-ம் ஆண்டு, தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி (அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம்) அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். பின்னர் அதே ஆண்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு அருகே உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் தமிழகம் வந்து 5 இடங்களையும் ஆய்வு செய்துவிட்டு சென்றனர். அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் மத்திய குழு கூடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்து ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் இதற்காக ரூ.1,264 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல் தெலுங்கானா மாநிலம் பிபி நகரில் ரூ.1,028 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் மந்திரி சபை குழு ஒப்புதல் அளித்தது.

இந்த தகவலை மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் பெட்ரோலிய துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவிலும், தெலுங்கானா மாநிலம் பிபி நகரில் ரூ.1,028 கோடி செலவிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளார். மந்திரிசபை குழுவின் முடிவு பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் மோடிக்கும், சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்.

மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதால் கூடுதலாக 100 எம்.பி.பி.எஸ். இடங்களும், மற்றும் 60 பி.எஸ்சி. (நர்சிங்) இடங்களும் கிடைக்கும். இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் இருக்கும்.

மேலும் இந்த மருத்துவமனை தினசரி 1,500 வெளிநோயாளிகளுக்கும், ஒரு மாதத்துக்கு 1,000 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடியதாக இருக்கும். இங்கு 15 முதல் 20 வரையிலான சிறப்பு துறைகள் இருக்கும். இந்த மருத்துவமனைக்கு ஒரு இயக்குனர் நியமிக்கப்படுவார்.

45 மாதங்களில் இந்த மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



இதேபோன்ற வசதிகள் தெலுங்கானா மாநிலம் பிபி நகரில் அமைக்கப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலும் இருக்கும். மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalanisamy #PMModi #AimsHospital
Tags:    

Similar News