செய்திகள்

வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு

Published On 2018-11-01 21:02 GMT   |   Update On 2018-11-01 21:02 GMT
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பின்னரே இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #KartiChidambaram #AbroadTravel
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை நிறுவனங்கள் பதிவு செய்துள்ள இந்த வழக்குகளில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.



இந்த நிலையில் தான் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் யு.யு.லலித், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது அவ்வளவு முக்கியமில்லை எனக்கூறிய நீதிபதிகள், எனவே ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பின்னரே இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.  #KartiChidambaram #AbroadTravel
Tags:    

Similar News