செய்திகள்

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது

Published On 2018-10-27 06:03 GMT   |   Update On 2018-10-27 06:03 GMT
திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 4 தமிழர்களை கைது செய்த செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 25 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். #Redsandalwood #Arrest
திருப்பதி:

திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதி புள்ளைய காரி பல்லி என்ற அடத்தில் இன்று அதிகாலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாசு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 30க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்த கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கோதண்டம் என்ற போலீஸ்காரரின் தலையில் கல்பட்டு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

அவரை மீட்ட போலீசார் ரங்கம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் செம்மர கடத்தல் கும்பல் தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் தற்காப்பிற்காக வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து கடத்தல் கும்பல் தப்பி ஓடியது.அவர்களை விரட்டி சென்ற போலீசார் 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த பொன்னிவேல், சிலக்காடு, சக்திவேல், சின்னராஜ், குமார் என தெரிய வந்தது.

இதில் தப்பி ஓடும் போது கீழே விழுந்ததில் ஒருவருக்கு கால் உடைந்தது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் வனப்பகுதியில் தப்பி ஓடியவர்களை பிடிக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடத்தல் கும்பல் விட்டு சென்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான 25 செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். #Redsandalwood #Arrest

Tags:    

Similar News