செய்திகள்

மந்திரி மகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் மோசடி - வாலிபர் கைது

Published On 2018-09-07 22:35 GMT   |   Update On 2018-09-07 22:35 GMT
மந்திரி மகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காக்கிநாடா:

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரம் பகுதியை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா (வயது 28). பி.டெக் படித்து வந்த அவர் தன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

மிகவும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட அவர் முகநூலில் அழகான வாலிபர்களின் புகைப்படத்தை அனுப்பி, அதை தன்னுடைய படம் என்றும், வசதியான குடும்பதை சேர்ந்தவர் என்றும் நம்ப வைத்து இளம்பெண்களை தன் காதல் வலையில் விழ வைத்தார்.

நன்கு பழகிய பணக்கார பெண்களிடம் வீடியோ காலில் பேசி தன்னுடைய வியாபாரத்துக்கு அவசரமாக பணம் தேவை என்று கூறி கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி உள்ளார். மேலும் பல பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம், நகையை பெற்றுள்ளார்.

அவ்வாறு ஏமாற்றி வாங்கிய பணத்தை கிரிக்கெட் சூதாட்டம், குதிரை பந்தயம் என ஆடம்பர செலவு செய்து வந்தார். அவரிடம் ஏமாந்த பெண்கள் சிலர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஐதராபாத் போலீசாரால் வம்சி கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார். அதன் பிறகும் அவர் பல பெண்களுக்கு காதல் வலைவீசி பணம், நகைகளை பறித்து உள்ளார். மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரிடம் 6 மாதத்துக்கு முன்பு பணம், நகையை ஏமாற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அவர் மீது ஐதராபாத், கம்மம், நிஜாமாபாத் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 6 மாதங்களில் 25 சிம்கார்டுகளை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்துள்ளார். இந்நிலையில் காக்கிநாடா ரெயில் நிலையத்தில் அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் தெலுங்கானா மந்திரி ஒருவரின் மகள் மற்றும் ஆந்திர மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மகள்கள் உள்பட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ரூ.4 கோடிக்கும் மேல் வம்சி கிருஷ்ணா பணம் பறித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News