வதந்திகளை தடுப்பது சவாலான பணியாக உள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் மத்திய அரசிடம் இன்று விளக்கமளித்துள்ளது. #Whatsapp #lynching
வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் - வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்
பதிவு: ஜூலை 04, 2018 13:10
புதுடெல்லி:
சமூக வலைத்தளங்களில் முதன்மை இடத்தை வகிக்கும் பேஸ்புக் மற்றும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
குறிப்பாக, பெண்கள் கற்பழிப்பு, இறைச்சிக்காக பசு மாடுகள் கடத்தல், பிள்ளைகளை கடத்தும் கும்பல் போன்ற விவகாரங்கள் தொடர்பாக பரிமாறப்படும் தவறான தகவல்களும் வதந்திகளும் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றன.
இதனை அடுத்து, வதந்தி சார்ந்த வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்தது. ‘வாட்ஸ் அப் செயலியில் பரப்பப்படும் பொறுப்பற்ற, உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய, ஆத்திரமூட்டும், வதந்தியான தகவல்களால் சமீபகாலமாக பல மாநிலங்களில் படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளன நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயலிகளை சில சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு வருகின்றனர். இதில் தங்களுக்கான பொறுப்பை இந்த செயலி நிறுவனம் தட்டிக் கழித்துவிட முடியாது. இதைப்போன்ற தகவல்கள் பரவுவதை உரிய சாதனங்களின் மூலம் உடனடியாக தடுத்தாக வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை தடுப்பது சவாலான பணியாக உள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் மத்திய அரசிடம் இன்று விளக்கமளித்துள்ளது.