செய்திகள்

திரிபுரா முதல்-மந்திரியை டெல்லிக்கு அழைக்க காரணம் என்ன?: மாநில அரசு விளக்கம்

Published On 2018-05-01 00:38 GMT   |   Update On 2018-05-01 00:38 GMT
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட திரிபுரா முதல்-மந்திரி பிப்லப் குமாரை டெல்லிக்கு அழைத்ததற்கான காரணம் குறித்து மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
அகர்தலா:

திரிபுராவில் பா.ஜனதா சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றவர் பிப்லப் குமார் தேப். இவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு அதிர்ச்சியளித்து வருகிறார்.

அதாவது, ‘மகாபாரத காலத்திலேயே இணையதள வசதி இருந்தது’, ‘டயானா ஹைடனுக்கு உலக அழகி பட்டம் கொடுத்ததன் பின்னணி’, ‘படித்த இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திராமல் மாடு மேய்க்க வேண்டும்’ என்பது போன்ற கருத்துகளை கூறி பா.ஜனதாவினரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி இருந்தார். இந்த நிலையில் பிப்லப் குமாரை நாளை (புதன்கிழமை) டெல்லிக்கு வருமாறு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். அவரது சர்ச்சை கருத்துகளுக்காக கண்டிப்பதற்காகவே இந்த அழைப்பு என செய்திகள் வெளியானது. ஆனால் இதை திரிபுரா முதல்-மந்திரி அலுவலகம் மறுத்துள்ளது.

டெல்லியில் நடக்கும் முதல்-மந்திரிகள் கூட்டம் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின நினைவாக நடத்தப்படுவதாகவும், இதற்காக பிப்லப் குமாருக்கு ஒரு மாதத்துக்கு முன்பே அழைப்பு வந்திருப்பதாகவும் முதல்-மந்திரி அலுவலக மூத்த அதிகாரி மிலிந்த் ராம்டேக் கூறினார். எனினும் பிப்லப் குமார் டெல்லி செல்வதை முதல்-மந்திரி அலுவலகம் இன்னும் உறுதி செய்யவில்லை. 
Tags:    

Similar News