செய்திகள்

அதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும்- ராஜன்செல்லப்பா மீண்டும் பேச்சு

Published On 2019-06-10 10:15 GMT   |   Update On 2019-06-10 10:15 GMT
அமைச்சர்களானாலும், தொண்டர்களானாலும் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மீண்டும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற  ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்தால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அ.தி. மு.க. வீறுகொண்டு எழுந்து மகத்தான வெற்றியை பெறுவோம். அ.தி.மு.க.வை வீழ்த்த பலர் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால் யாராலும் வீழ்த்த முடியாத இயக்கமாக அ.தி.மு.க.  உள்ளது.  தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் நாம் வாக்கு சேகரிக்க சென்ற இடத்திலும் மக்களிடம் எதிர்ப்பு இல்லை.

குடிநீர், சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் அடிப்படை வசதிகளை தமிழகமெங்கும் நன்கு மேம்படுத்தி கொடுத்துள்ளனர். நேரடியாக மக்களிடம் தொடர்பு கொண்டவர்களாக உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர். அதனால்  பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். காலம் தாழ்த்தாதீர்கள். உங்களுக்குள் யார் பதவிக்கு தகுதியான நபர் என்பதை தேர்வு செய்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். 

திருப்பரங்குன்றத்தில் சிறு,சிறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை தவற விட்டு விட்டோம். இனிமேல் மீண்டும் அதுபோன்ற ஒரு தவறை நாம் செய்து விடக்கூடாது. அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சியின் கட்டுப்பாடுகளை நாம் காப்பாற்ற வேண்டும். தோல்வியால் தொண்டர்கள் சோர்ந்த விடக் கூடாது. 

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News