செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு இரட்டை தலைமை ஒத்து வராது - முத்தரசன் பேட்டி

Published On 2019-06-09 10:13 GMT   |   Update On 2019-06-09 12:01 GMT
அரசியல் கட்சிகளுக்கு இரட்டை தலைமை ஒத்து வராது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி தண்ணீர் விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பிரச்சனையை எதிர்க் கட்சியினர் பார்த்துக்கொள்வார்கள் என்று பேசியது பொறுப்பற்ற பேச்சு. அ.தி.மு.க.வில் நிலவும் ஒற்றை தலைமை, இரட்டைத் தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய போவதை இது காட்டுகிறது.


கட்சி, இயக்கம், அமைப்பு என்றாலே இதுவரை ஒரு தலைமை மட்டுமே செயல்பட்டு வந்திருக்கிறது. இரட்டை தலைமை என்பது ஒத்து வராது. தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகாவில் மேகதாது அணை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுவோம் என்று கூறவில்லை. தவறான தகவலை தொடர்ந்து தமிழக முதல்வர் பேசி வருகிறார். இந்த பிரச்சினையில் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ராகுல்காந்தி மீது பழியை போடுகிறார்.

தமிழகத்தில் இந்த ஆண்டாவது குறுவை சாகுபடி நடைபெறும் என்று விவசாயிகள் நம்பியிருந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் வேதனை அடையச் செய்துள்ளது. ஆணைய உத்தரவுப்படி 9 டிஎம்சி தண்ணீரை தமிழக அரசும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை, மத்திய அரசும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை.

அதற்கு பதிலாக அவர்கள் தங்களுடைய கட்சி தலைமை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆட்சியை கலைத்தாலும் புதுச்சேரியில் செயல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஆனால் தமிழக முதல்வர் இந்த வி‌ஷயத்தில் மெளனம் காப்பது ஏன்? மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த நினைக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் சரி, 8 வழிச்சாலை திட்டமாக இருந்தாலும் சரி மக்களுக்கு எதிரான செயல்பாட்டையே அரசு எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளிலும் அரசு ஆய்வு செய்து முறையாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News