செய்திகள்

தமிழகத்தில் பா.ஜனதா தோல்வி- டாக்டர் தமிழிசை மாற்றப்படுவாரா?

Published On 2019-05-26 10:49 GMT   |   Update On 2019-05-26 10:49 GMT
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றிபெறாததால் தமிழிசையிடம் பா.ஜனதா தலைமை விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றிபெற வில்லை.

தமிழகத்தில் குறைந்தது 2 அல்லது 3 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்று கருதிய பா.ஜனதா 5 தொகுதிகளிலும் நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கியது.

தூத்துக்குடியில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கன்னியா குமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜா, கோவையில் கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இவர்களை ஆதரித்து பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் பிரசாரம் செய்தனர். ஆனால் 5 பேரும் தோல்வியை தழுவினர்.

இந்த தோல்வி பா.ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே மாநில தலைவரை மாற்ற பா.ஜனதா தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைவர் பதவிகாலம் முடிந்த பிறகும் அவர் 2-வது முறையாகவும் மாநில தலைவராகவே பதவி வகித்து வந்தார். தற்போது அவரை மாற்ற முடிவு செய்துள்ள தேசிய தலைமை, புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. வானதி சீனிவாசன், சி.பி.ராதா கிருஷ்ணன், கே.டி.ராகவன் ஆகியோரது பெயர்கள் முன்னிலையில் உள்ளது.


இதற்கிடையே தமிழ்நாட்டில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் என்ன? என்பது குறித்து பா.ஜனதா தலைமை விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுடன் அல்லாமல் போட்டியிட்ட போதே 5.48 சதவீத ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பிறகும் 3.65 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளது.

அ.தி.மு.க.வை பொறுத்த வரை 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தான் கவனத்தை செலுத்தியது. பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக ஆளும் கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலில்கூட கன்னியாகுமரி, தர்மபுரி தொகுதிகளில் எங்கள் கூட்டணி கைப்பற்றி இருந்தது. ஆனால் இம்முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பிறகும் ஒரு தொகுதிகள்கூட வெற்றி பெற முடியாதது வருத்தமாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News