செய்திகள்

தேனி தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து வழக்கு தொடருவோம் - இளங்கோவன்

Published On 2019-05-26 08:38 GMT   |   Update On 2019-05-26 09:44 GMT
தேனி பாராளுமன்ற தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து வழக்கு தொடருவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றிக்காக உழைத்த கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடு முழுவதும் அதிகார பலம், பண பலத்தால் மோடி வெற்றி பெறுள்ளார். தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அதிகாரபலம், பணபலத்தால் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

எனினும் தேனியில் 4½ லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான தேனியிலேயே எனக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து நான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேனி தொகுதியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில ஆதாரங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எந்தெந்த ஆதாரங்களோடு வழக்கு தொடரலாம் என்று வக்கீல்களுடன் கலந்தாலோசித்துக்கொண்டு இருக்கிறோம். வழக்கு போட இன்னும் 25 நாட்கள் அவகாசம் இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் வழக்கு போடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம்.

வாக்கு எண்ணிக்கையின் போது பல மின்னணு எந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால் அரக்கு 1 மாதத்தில் உருகலாம் என்கிறார்கள். சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். மதுரை வாக்குச்சாவடியில் இருந்த பெட்டி தேனி பாராளுமன்ற தொகுதியில் இருக்கிறது. இதுபோலபல வி‌ஷயங்கள் முறைகேடாக நடந்திருக்கின்றன. இதுதொடர்பாக வக்கீல்களோடு கலந்து ஆலோசித்து கண்டிப்பாக நான் வழக்கு தொடர இருக்கிறேன்.

கேள்வி:- ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர இருக்கிறீர்களா? தேர்தல் ஆணைய முறைகேடுகளை பற்றி வழக்கு தொடர இருக்கிறீர்களா?

பதில்:- இரண்டும் ஒன்று தானே. அவர் வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை பற்றித்தான் வழக்கு தொடர இருக்கிறேன்.

கே:- மத்தியில் காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம்?

ப:- தமிழகத்தில் அமைந்தது போல ஒரு கூட்டணி அமையாதது தான் முக்கிய காரணம். ராகுல் காந்திதான் பிரதமராக வருவார் என்று தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்ததால் மதச்சார்பற்ற கட்சிகள் மும்முரமாக வேலை செய்தது. அதுபோல் வட இந்தியாவிலும், மற்ற இடங்களிலும் எதிர்க் கட்சிகள் அறிவிக்காத காரணத்தால் தான் இந்த மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது.

 


 

குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களில் கூட்டணி அமைத்து ஒற்றுமையாக இருந்திருந்தால் மோடி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கின்ற 4 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் ஆங்காங்கே வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறு நிகழ்ந்திருப்பதாக சொன்னார்கள். அதைப் பற்றிய செய்திகள் முழுமையாக இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வரும்.

கே:- முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி வழக்கு தொடருமா?

ப:- காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று தான் முடிந்திருக்கிறது. காங்கிரஸ் ஏன் தோற்றது என்று ஆராய்ச்சி செய்வதற்காக 4 பேர் கொண்ட கமிட்டியை ராகுல் காந்தி அமைத்திருக்கிறார். இதுபற்றி எல்லா செய்திகளையும் சேகரித்து கண்டிப்பாக வழக்கு தொடர வேண்டும் என்ற அவசியம் ஏற்படும் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடரும்.

கே:- ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றிக்கு மோடி காரணம் என்று சொன்னீர்கள் அது ஏன் என்று தெரியுமா?

ப:- என்ன காரணம் என்று தெரியவில்லை. பன்னீர்செல்வம் மீது மோடிக்கு அவ்வளவு காதல் ஏன் என்று தெரியவில்லை. தமிழிசை சவுந்தரராஜன் மீது இல்லாத காதல், பொன். ராதாகிருஷ்ணன் மீது இல்லாத காதல், சி.பி.ராதா கிருஷ்ணன் மீது இல்லாத காதல், எச்.ராஜா மீது இல்லாத காதல், ஓ.பன்னீர் செல்வம் மகனின் மீது மட்டும் ஏன் மோடிக்கு அவ்வளவு காதல் என்று எனக்கு தெரியவில்லை. ஏதாவது விசே‌ஷ சங்கதிகள் இருக்கிறதா என்று மோடியிடம் தான் அதைப்பற்றி கேட்க வேண்டும்.

தேனி தொகுதியில் இருக்கிற விவிபாட்டை முழுவதும் சரியாக எண்ண வேண்டும். நாங்கள் வழக்கு தொடரும் போது அதையும் சொல்வோம்.

கே:- அடுத்த தேர்தலிலாவது வாக்கு சீட்டு முறையை கொண்டுவர தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் கொடுப்பீர்களா?

ப:- அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே வாக்குப் பதிவு எந்திரங்கள் துல்லியமாக செயல்படுவதில்லை. எனவே அவர்கள் வாக்குச் சீட்டு முறைக்கு சென்று விட்டார்கள். நமது நாட்டை பொறுத்தவரை மோடியை போல ஒரு ஆளை வைத்துக் கொண்டு தேர்தல்கமி‌ஷன் எடுபிடியாக இருக்கின்றது. உச்சநீதிமன்றம் எடுபிடியாக இருக்கின்றது. ரிசர்வ் வங்கி எடுபிடியாக இருக்கின்றது. எல்லாவித அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டுள்ள மோடிக்கு மின்னணு எந்திரங்கள் மிகவும் வசதியாக போய்விட்டது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் மேலிடத்தில் நாங்கள் சொல்வோம், வாக்குப் பதிவு எந்திரத்தை விட வாக்குச்சீட்டு முறைதான் சிறந்தது என்று மேலிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News