செய்திகள்

அதிமுக ஆட்சி தொடர மக்கள் வாக்களித்துள்ளனர்- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-05-24 11:03 GMT   |   Update On 2019-05-24 11:03 GMT
அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும் என்பதை வெளிக்காட்டியுள்ளன. நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.

தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும்.


மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது. ஜூன் 3-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று துரைமுருகன் கூறி இருந்தார். ஆனால் அதுபோல் எதுவும் நடக்காது. அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்று நான் கூறி இருந்தேன்.

துரைமுருகன் சொல்வது போல் நடக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று நான் கேள்வி எழுப்பி இருந்தேன்.

அவர் சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை. எனவே, துரைமுருகன் தனது பதவியில் இருந்து விலகுவாரா?

தினகரனை பொறுத்தவரை மக்கள் அவரை நிராகரித்து விட்டனர். உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் தமிழக திட்டங்கள் பற்றி மேற்கொண்ட தவறான பிரசாரமும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

எதிர் காலத்தில் இந்த தேர்தல் கூட்டணி தொடருமா என்பது பற்றி நான் எதுவும் கூற முடியாது. அது கட்சியின் கொள்கை சார்ந்த முடிவாகும்.

பா.ஜனதாவுடன் சேர்ந்ததால் அ.தி.மு.க. தோற்றதா? என்பது போன்ற யூகமான கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News