செய்திகள்

வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்

Published On 2019-05-24 01:22 GMT   |   Update On 2019-05-24 01:22 GMT
தேனியில் தாம் பெற்ற வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கூறினார்.
தேனி:

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வெற்றி சான்றிதழ் தரப்பட்டது.  தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவ் வெற்றி சான்றிதழை வழங்கினார்.

வெற்றி சான்றிதழை பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 
Tags:    

Similar News