செய்திகள்

திருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றிமுகம்

Published On 2019-05-23 07:57 GMT   |   Update On 2019-05-23 07:57 GMT
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
திருவாரூர்:

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம், அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ், மக்கள்நீதி மய்யம் வேட்பாளர் அருண் சிதம்பரம், நாம் தமிழர் வினோதினி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், கடந்த ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் திருவாரூர் திரு.வி.க.கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கண்காணிப்பு கேமிராக்கள், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை திரு.வி.க. கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முன்னதாக காலை 7 மணியளவில் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் வந்தனர். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர், துணை தேர்தல் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 4 சுற்று முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் விவரம்:-

பூண்டி கலைவாணன் (தி.மு.க.)-18,891

ஆர்.ஜீவானந்தம் (அ.தி.மு.க.)-9,892

எஸ்.காமராஜ் (அ.ம.மு.க.)-3166

அருண் சிதம்பரம் (மக்கள் நீதி மய்யம்):-538

வினோதினி (நாம் தமிழர்):-1249

மறைந்த தி.மு.க. தலைவர் சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

திருவாரூர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
Tags:    

Similar News