செய்திகள்

அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: 4 ஆம்னி பஸ்களில் வந்த வாக்காளர்களை அதிகாரிகள் தடுத்தால் பரபரப்பு

Published On 2019-05-19 06:37 GMT   |   Update On 2019-05-19 06:37 GMT
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்களிக்க 4 ஆம்னி பஸ்களில் வந்த வாக்காளர்களை அதிகாரிகள் தடுத்தால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடை பெற்றது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணி மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒன்றன்பின் ஒன்றாக 4 ஆம்னி பஸ்கள் வந்தன. அதனை வழிமறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, எஸ்.பி. விக்ரமன் ஆகியோர் தலைமையில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பஸ்களில் முஸ்லிம்கள் ஏராளமானோர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெளியூர் நபர்களுக்கு இங்கு அனுமதியில்லை என்றனர்.


இதையடுத்து பஸ்சில் வந்தவர்கள், நாங்கள் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார், பள்ளப்பட்டியை சேர்ந்தவரா? என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்து விட்டு அனைவரும் செல்லும்படி அறிவுறுத்தினர்.

இதற்காக அவர்களின் வாக்காளர் அட்டையை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளப்பட்டி பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் பலர் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தொழில் செய்து வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தமட்டில் முஸ்லிம் வாக்குகள் மட்டும் 30 சதவீதம் உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் வாக்களிக்க வந்த இஸ்லாமியர்கள் கூறுகையில், ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக நாங்கள் வாக்களிக்க வந்தோம். ஆனால் போலீசார் எங்கள் மீது சந்தேகமடைந்து விசாரணை நடத்தினர். எங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை பார்த்த பிறகே வாக்களிக்க செல்ல அனுமதி அளித்தனர். நாங்கள் யாரிடமும் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்க வரவில்லை. ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளோம். இருப்பினும் போலீசார் எங்களிடம் விசாரணை நடத்தியது வருத்தமளிக்கிறது என்றனர்.

Tags:    

Similar News