செய்திகள்

கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம்- அர்ஜூன் சம்பத் எச்சரிக்கை

Published On 2019-05-18 09:11 GMT   |   Update On 2019-05-18 09:11 GMT
தனது கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

இந்து தீவிரவாதி மற்றும் இந்து என்பது மாற்றான் சொல் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்த கமலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

இந்து என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல. அது ஒரு கலாச்சாரம். அடையாளம். கருட புராணத்திலேயே இந்துஸ்தானம் உள்ளது. இந்து என்பது வெறும் சொல் அல்ல. வாழ்வியல் நெறியாகும். இந்திராகாந்தியை ஒரு சீக்கியர் சுட்டுக்கொன்றார் என்பதற்காக அதனை சீக்கிய தீவிரவாதம் என்று கூற முடியுமா? ராஜீவ்காந்தி கொலையை சுட்டிக்காட்டி தமிழர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று கூறமுடியுமா?

எனவே இந்து தீவிரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பதன் மூலம் கமல் வரலாற்று பிழையை செய்துள்ளார். காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது. காந்தியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கோட்சேயிடம் இந்து மதம் சொல்லவில்லை.

விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது கமல் என்ன பாடுபட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி பாதிப்புக்குண்டான கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசுவது மிகவும் ஆபத்தானது.

இடதுசாரி சிந்தனை கொண்டவர்களுடன் கமலுக்கு ஏற்பட்ட தொடர்பே இதற்கு காரணம். தான் எழுதியுள்ள யார் மகாத்மா? என்கிற புத்தகத்தை கமல் படிக்க வேண்டும். இந்து என்பது மாற்றான் சொல் என்று கூறும் கமலுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த ஆவணங்களோடு தயாராகவே உள்ளேன்.


கமல் தயாரா? தனது கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும்.

இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.

Tags:    

Similar News