செய்திகள்

டெல்லியில் இருந்து சென்னை வந்த அ.தி.மு.க. எம்.பி. சூட்கேசில் ரூ.25 லட்சம்

Published On 2019-05-18 00:51 GMT   |   Update On 2019-05-18 00:51 GMT
டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அ.தி.மு.க. எம்.பி.யின் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் இருந்தது. இது தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று இரவு 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் ஆரணி தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலை வந்தார்.

டெல்லி விமான நிலையத்தில் அவரது உடைமைகளை சோதனை செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது சூட்கேசில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி அந்த விமானம், சென்னையில் தரை இறங்கியதும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஏழுமலை எம்.பி.யை தடுத்து நிறுத்தி, அவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில் ரூ.25 லட்சம் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சென்னை விமான நிலையம் விரைந்து வந்து அ.தி.மு.க. எம்.பி.யிடம் விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஏழுமலை எம்.பி. மகளின் படிப்பு செலவுக்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறி அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.

பின்னர் ஒரு மணி நேர விசாரணைக்கு பின் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பணத்துடன் செல்ல அனுமதித்தனர்.

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News