செய்திகள்

நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: 4 தொகுதி வாக்காளர்களுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள்

Published On 2019-05-17 06:32 GMT   |   Update On 2019-05-17 07:24 GMT
நான்கு தொகுதி இடைத்தேர்தலில் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை:

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதுதொடர்பாக அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை மூலம் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நல்லதை எந்நாளும் போற்றி அல்லதை அறவே அகற்றுகின்ற அரசியல் ஞானம் மிகுந்த அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு பணிவார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், இவ்வரசு பல்வேறு சாதனைகள் செய்து வருகிறது.

‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய அன்புப்பாதையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வழியில் ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற நல்ல நோக்கத்திற்காக செயல்படும் இந்த அரசு மெருகோடு, மிடுக்கோடு தொடர்ந்து நடைபெற, வருகின்ற மே 19 அன்று நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், உங்களின் பொன்னான ஆதரவை ‘இரட்டை இலை’ சின்னத்தில் வழங்கி, கழக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து, அதன் மூலம் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த நல்லாட்சியின் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பற்றினையும், பாசத்தினையும் உறுதிபட இந்நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென, வாக்காளப் பெருமக்களாகிய உங்களையெல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் இருவரும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News