செய்திகள்

நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களை பயங்கரவாதிகள் போன்று சோதனை நடத்துவதா? - முத்தரசன் கண்டனம்

Published On 2019-05-06 06:09 GMT   |   Update On 2019-05-06 06:09 GMT
நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களை பயங்கரவாதிகள் போன்று சோதனை நடத்துவதா? என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #mutharasan #Neetexam

வேலூர்:

வேலூர் சாய்நாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணையும் விழா மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில் நடந்தது.

இதில், சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும், தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும். அ.தி.மு.க. தோல்வி பயத்தால்தான் 3 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய உள்ளனர். சபாநாயகர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது. மக்களை சந்திக்க அ.தி.மு.க.வினருக்கு பயம். அதனால்தான் அவர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போடுகிறார்கள். கூடுதல் கால அவகாசம் கேட்கிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் வீட்டு வரி, குடிநீர் வரி போன்றவற்றை அதிகாரிகள் பல மடங்கு உயர்த்தி விட்டனர்.


 

தமிழகத்தில் 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்தும், இதுவரையில் அரசு அந்த மாவட்டங்களில் எவ்வித வறட்சி நிவாரண பணிகளையும் மேற்கொள்ளவில்லை. குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. மக்கள் தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு குடிநீர் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்னியர் சமுதாய மக்கள் குறித்து நான் தவறாக எதுவும் பேசவில்லை. பொன்பரப்பியாக இருந்தாலும் சரி, குச்சிபாளையமாக இருந்தாலும் சரி, தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் 10 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை அனுப்பியும் இதுவரை தலைமை தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

வேலூர் பாராளுமன்ற தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். வேலூரில் மட்டும் பண நடமாட்டம் என்று கூறுவது நகைப்பிற்குரியது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பண நடமாட்டம் காணப்பட்டது. தமிழகத்தில் நடந்த ‘நீட்’ தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. பயங்கரவாதிகளை விட அதிகளவு மாணவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பின்னடைவு. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #Neetexam

Tags:    

Similar News