செய்திகள்

சூலூர் தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

Published On 2019-04-26 08:09 GMT   |   Update On 2019-04-26 08:11 GMT
சூலூர் பகுதி மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். #TNAssemblyByElection #TNElections2019

சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இது வரை 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

இன்று தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வக்கீல் விஜயராகவன் ஆகியோர் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

சூலூர் தொகுதியில் வருகிற 1-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்கிறார். தலைவர்கள் பிரசாரத்திற்கு பின்னர் தான் சூலூர் தொகுதி தேர்தல் களை கட்டும்.

நாளை மறுநாள் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பிரசாரம் செய்ய உள்ளார். சூலூர் தொகுதியில் 1-ந் தேதிக்கு பின்னர் தான் பிரசாரம் சூடுபிடிக்கும். அ.தி.மு.க.மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சூலூரில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்.

சூலூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி இன்றுடன் 5 நாட்கள் ஆகிவிட்டது. மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. ஆனால் சூலூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

சூலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளது.

சூலூர் தொகுதியில் 9 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் வாகன சோதனை நடைபெற்றது.

சூலூர் பகுதி மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். #TNAssemblyByElection #TNElections2019

Tags:    

Similar News