செய்திகள்

கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டுகிறேன்- இயக்குனர் பேரரசு பேட்டி

Published On 2019-04-25 06:31 GMT   |   Update On 2019-04-25 06:31 GMT
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டவதாக இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். #KamalHaasan #Perarasu
கன்னியாகுமரி:

விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி, அஜித்குமார் நடித்த திருப்பதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. இவர் இன்று கன்னியாகுமரி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சினிமா உலகில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளேன். 9 படங்களை இயக்கி இருக்கிறேன். மலையாளத்தில் சாம்ராஜ்யம் 2 படத்தையும் இயக்கியுள்ளேன். ஜூன் மாதம் மேலும் 2 அல்லது 3 படங்களை இயக்க உள்ளேன்.

ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க விருப்பம் உள்ளது. அந்த லட்சியம் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் மக்கள் சேவைக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும்.

ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களின் மன நிலை மாறவேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவது தேசத்துக்கு செய்யும் துரோகம். இது நல்ல அரசியல் இல்லை. இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.


பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டுகிறேன்.

நானும் மக்கள் பிரச்சனைகளுக்காக நடந்த போராட்டங்களில் பங்கெடுத்து உள்ளேன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்சனைக்காக போராடியுள்ளேன். மீனவர்கள் பிரச்சனைக்காகவும் போராடுவேன்.

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைவதால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்காகவும் போராடுவேன்.

தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறுகிறது. அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்பவர்களே உண்மையான அரசியல்வாதிகள். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் அளிப்பது பற்றி கூறும்போது, அதனை தேர்தல் கமி‌ஷன் கண்டிக்க வேண்டும். ஓட்டுக்காக இலவசம் தருவதாக அறிவிப்பதும் லஞ்சம்தான் என்பதை உணர வேண்டும். மாதம் தோறும் வங்கியில் பணம் போடுகிறேன் என்று கூறுவதை தேர்தல் கமி‌ஷன் தடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் யார் அதிக பணம் கொடுத்தார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்த வெற்றி உண்மையான வெற்றியாக இருக்காது. எனக்கு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரும்போது, அப்போது எந்த கட்சி நல்ல கட்சியாக எனக்கு தோன்றுகிறதோ, அந்த கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன்.

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து சில நாடுகள் மட்டுமே கண்டனம் தெரிவித்து உள்ளன. இதனை உலக நாடுகள் அனைத்தும் கண்டிக்க வேண்டும்.

ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு மதத்தினர் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. ஒரு மதத்தை இன்னொரு மதம் எதிர்ப்பதற்கும் உரிமை இல்லை.

வேலூர் ஜெயிலில் இருக்கும் ராஜீவ் கொலை கைதிகளான நளினி, முருகன், பேரறிவாளன் ஆகியோரை 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவர்கள் ஆயுள் கைதிகள் அனுபவிக்கும் தண்டனை காலத்தை விட அதிக தண்டனை அனுபவித்து விட்டார்கள்.

இவர்களை விடுவிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடப்பட்டது. இப்போது நடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் கூட அவர்கள் விடுவிக்கப்படாதது மர்மமாக உள்ளது. இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளும், கவர்னரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் முறையாக நடக்கவில்லை. பலரது வாக்குரிமை மறுக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலானவர்களுக்கு பூத் சிலிப் கூட வழங்கப்படவில்லை. இதில் தேர்தல் ஆணையம் முறையாக நடக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #Perarasu
Tags:    

Similar News