செய்திகள்

ஓட்டுப்பதிவு கருவியில் பாம்பு: மோடி அரசாங்கத்தில் எதுவும் நடக்கும் - நடிகை குஷ்பு கிண்டல்

Published On 2019-04-24 05:03 GMT   |   Update On 2019-04-24 05:03 GMT
ஓட்டுப்பதிவு கருவியில் இருந்து பாம்பு வெளியான சம்பவம் குறித்து, மோடி அரசாங்கத்தில் எதுவும் நடக்கும் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். #kushboo #PMModi

சென்னை:

வாக்குப்பதிவின்போது ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் (விவிபேட்) கோளாறு ஏற்பட்டு பல பகுதிகளில் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

நேற்று கேரளாவின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கண்ணூரு தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டக்கை வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களித்துக் கொண்டு இருந்த போது திடீரென விவி பேட் இயந்திரத்தில் இருந்து சிறிய அளவிலான பாம்பு வெளியில் வந்தது. இதை பார்த்த வாக்காளர்கள் கூச்சலிட்டனர். இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இயந்திரத்தில் இருந்து பாம்பு அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

விவிபேட் இயந்திரத்தில் பாம்பு இருந்தது சர்ச்சையானது. காங்கிரசின் முன்னாள் அமைச்சர் சசி தரூர் இதுபற்றிய செய்தியை பகிர்ந்ததோடு இந்திய ஜனநாயகத்தில் இதுதான் முதல் முறை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவை தனது டுவிட்டரில் பதிந்த நடிகை குஷ்பு மோடி ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பதிவிட்டார். இதற்கு சமூக வலை தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன.

விவிபேட் இயந்திரத்தில் பாம்பு புகுந்ததற்கு கூடவா மோடியை விமர்சிக்க வேண்டும்? மோடி இயந்திரத்தையோ பாம்பையோ சப்ளை செய்தாரா? என்ற ரீதியில் குஷ்புவை விமர்சித்து வருகிறார்கள்.


ஆனால் குஷ்புவோ தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தன்னுடைய ஒரு படத்தை பகிர்ந்து இது விமர்சகர்களுக்கான பிரத்தியேக படம் என்று குறிப்பிட்டுள்ளார். #kushboo #PMModi

Tags:    

Similar News