செய்திகள்
சூலூர் சுகுமார் - அரவக்குறிச்சி சாகுல் ஹமீது

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்- அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Published On 2019-04-22 05:33 GMT   |   Update On 2019-04-22 05:33 GMT
தமிழகத்தில் விடுபட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். #TNElections2019 #TNAssemblyBypoll #AMMKCandidates
சென்னை:

தமிழகத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதி நீங்கலாக ஏனைய 38 தொகுதிகளுக்கு கடந்த 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருந்தது.

அதன்பிறகு, சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 3 சட்டமன்ற தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. அதன்பின்னர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் 7-வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளான மே மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

திருப்பரங்குன்றம் மகேந்திரன் -  ஓட்டப்பிடாரம் சுந்தரராஜ்

இந்த நிலையில், 4 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தரராஜ், சூலூர் தொகுதியில் கே.சுகுமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன், அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீது ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். #TNElections2019 #TNAssemblyBypoll #AMMKCandidates
Tags:    

Similar News