செய்திகள்

தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு - புதிய வீடியோ வெளியிட்டு கமல் விளக்கம்

Published On 2019-04-16 05:12 GMT   |   Update On 2019-04-16 05:12 GMT
டிவியை உடைக்கும் வீடியோ தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டை மீறியதாக வந்த புகாரை அடுத்து புதிய வீடியோ வெளியிட்டு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். #Kamalhassan
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடந்த வாரம் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், பா.ஜனதா தேசியப் பொதுச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பேசும் வார்த்தைகளை கமல்ஹாசன் டிவியில் பார்ப்பதை போலவும் அதனால் கோபமடைந்து டார்ச் லைட்டால் டிவியை உடைப்பது போலவும் அந்த வீடியோ அமைந்து இருந்தது.

இந்த விளம்பரம் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் தேர்தல் விதிமுறைகளை மீறி அந்த விளம்பரத்தில் சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக புகார் சென்றது. இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், கமல்ஹாசன் விளம்பரத்தில் மாற்றங்களை செய்துள்ளது. சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்கு பதில் பீப் ஒலி ஒலிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்டு கமல் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எங்கள் கட்சியின் பிரசாரப் பட வீடியோவில் பல வார்த்தைகளை ஒலி நீக்கி சில இடங்களில் ஊமைப்படமாக ஆக்க சம்மதிக்கிறது மக்கள் நீதி மய்யம். நடைமுறை சட்டங்களை என்றும் மதிக்கவே முனையும்.

நாளை நாங்கள் ஆளுங்கட்சியானாலும் இதே மாண்பு தொடரும். தேர்தல் ஆணையம் இடையூறின்றி சுதந்திரமாய் இயங்க விடுவோம். இன்று ஆள்வோருக்கு அந்த மாண்பு இல்லாதது இந்தியாவின் சோகம். அது விரைவில் நீங்க வாழ்த்துக்கள்’.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வீடியோவில் எங்கெல்லாம் பீப் ஒலி கேட்கிறது என்பது ஏற்கனவே விளம்பரத்தை பார்த்தவர்களுக்கு நன்றாக புரியும். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவியின் பெயரை கமல்ஹாசன் தனது விளம்பரத்தில் குறிப்பிடாமல் இருந்தார். எனவே அது பீப் ஒலியிலிருந்து தப்பிவிட்டது.



இந்த வீடியோ குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாசிடம் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:-

‘எங்கள் தலைவர் எப்போதும் நாகரிகம் கடைப்பிடிப்பவர். தனிமனிதத் தாக்குதல் செய்ய விரும்பமாட்டார்.

அதனால்தான் எந்தக் கட்சியின் பெயரையோ தலைவர்களின் பெயரையோ குறிப்பிடாமல் பொதுவாக விமர்சித்தார். அது சேர்ந்தவர்களுக்குப் போய் சேர்ந்திருக்கும். மற்றபடி அவருக்கு தயக்கமோ பயமோ கிடையாது.

அவர் ரிமோட்டை எறிந்து டிவியை உடைப்பது இன்றைய மக்களின் மன நிலை. அரசியல் வாதிகளின் போலியான தேர்தல் அறிக்கைகளைப் பார்த்து ‘அந்த டிவியை தூக்கிப் போட்டு உடைக்கணும்‘ என சொல்லும் அளவுக்குக் கொதித்துப் போயிருக்கிறார்கள் மக்கள். அதை பிரதிபலிக்கும் விதமாகத்தான் எங்கள் தலைவர் அவ்வாறு செய்தார்.

அந்தக் காணொலி மீது இன்று விமர்சனம் வருகிறது என்றால் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதுதானே. வெகுஜன மக்கள் எங்களைப் புரிந்துகொண்டு வருகிறார்கள். அதுபோதும்’.

இவ்வாறு அவர் கூறினார். #Kamalhassan
Tags:    

Similar News