செய்திகள்

வழக்குகளை கண்டு அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல- துரைமுருகன்

Published On 2019-04-11 05:06 GMT   |   Update On 2019-04-11 05:09 GMT
வழக்குகளை கண்டு அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல என்று பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #Loksabhaelections2019 #DuraiMurugan #Kathiranand
வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவரது வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து காட்பாடி பள்ளிகுப்பத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சீனிவாசன், தாமோதரன் வீடுகளில் வருமான வரிதுறை சோதனை நடத்தியதில் ரூ.11 கோடி 48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக கதிர்ஆனந்த் உள்பட 3 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து வேலூரில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-

தி.மு.க.வில் தலைவர் ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு அடுத்ததாக பொருளாளராக நான் உள்ளேன். வழக்கு பதிவு செய்வதன் மூலம் என்னை பயமுறுத்தினால் தி.மு.க.வினர் பயந்து விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டனர்.

வழக்குகளுக்காக அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல. பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வர நீண்ட நாட்களாகும். அப்போது அதை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.

தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, யாரையோ கேட்க வேண்டிய கேள்வியை இடமாறி என்னிடம் கேட்டுவிட்டீர்கள் என்றார்.


வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த் குடியாத்தம் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது வேட்பாளர் கதிர்ஆனந்திடம், வருமானவரி சோதனை தொடர்பாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக கேட்ட போது தான் பிரசாரத்தில் இருப்பதால் வழக்கின் முழுவிபரம் குறித்து தெரியவில்லை. வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.

தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் உறுதிமொழி பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனிவாசன் மீது வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் வைக்க இடம் கொடுத்ததாக தாமோதரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 6 மாதம் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்குபதிவு செய்யப்பட்ட விவரம் குறித்த அறிக்கை வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அவர் தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்யும். #Loksabhaelections2019 #DuraiMurugan #KathirAnand
Tags:    

Similar News