செய்திகள்

ஃபேஸ்புக்கில் பரவிய போலி தகவலால் இரண்டு பேர் தற்கொலை

Published On 2019-06-11 09:59 GMT   |   Update On 2019-06-11 10:01 GMT
ஃபேஸ்புக் வலைதளத்தில் தன்னைப் பற்றி போலி தகவல் பரவியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.



நெய்வேலி குறவன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா. கடலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த அவரைக் குறித்து தவறான தகவலை, அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார்  என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

அதன் காரணமாக இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த ராதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 



ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்களும், கிராமத்தினரும் பிரேம்குமார் வீட்டை அடித்து நொறுக்கியுள்ள நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்த அவரது அத்தை மகன் விக்னேஷ், ராதிகா இறந்த செய்தி கேட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, விக்னேஷின் தந்தையும், ராதிகாவின் தந்தையும் தனித்தனி புகாரை மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர். 



தலைமறைவான பிரேம்குமாரை கைது செய்ய வேண்டும் என்றும், ராதிகா மரணத்திற்கு நியாயம் கேட்டும் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கல்வீச்சு சம்பவம் நடந்தது. போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராதிகா மற்றும் விக்னேஷ் உடல்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் குறவன்குப்பம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலி செய்திகள் அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பல சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே போலி செய்தி பரவியதால் பலர் உயிரிழந்து இருக்கின்றனர்.
Tags:    

Similar News