செய்திகள்

காவிரி நீரை காஞ்சிபுரம் கொண்டுவர நடவடிக்கை -அத்தி வரதர் விழாவுக்காக ஏற்பாடு

Published On 2019-06-11 09:35 GMT   |   Update On 2019-06-11 09:35 GMT
அத்தி வரதர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க அரக்கோணத்தில் இருந்து திருப்பாற்கடல் குழாய் வழியாக காஞ்சிபுரத்திற்கு காவிரி நீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குளத்தில் இருந்து அத்தி வரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் உற்சவ விழா அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி தொடங்கி 48 நடைபெறுகிறது.

அத்தி வரதரைக் காண இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கவும், தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வேலூர் மாவட்டம் அரக்கோணத்திற்கு வரும் காவிரி நீரை காஞ்சிபுரத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, அரக்கோணத்தில் இருந்து திருப்பாற்கடல் குழாய் வழியாக காஞ்சிபுரத்திற்கு காவிரி நீர் கொண்டு வரப்பட உள்ளது.

ஒரு நாளைக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படும் என்று அரசுக்கு நகராட்சி மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான செலவாக நாள் ஒன்றிற்கு குடிநீர் வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் செலுத்தப்பட வேண்டி வரும் என்றனர்.


Tags:    

Similar News