செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு இல்லை - விவசாயிகள் கவலை

Published On 2019-06-11 08:48 GMT   |   Update On 2019-06-11 08:48 GMT
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு காலதாமதமாகும் என்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர்:

மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையில் 90 அடி நீர்மட்டம் இருக்கும் பட்சத்தில் அணையில் தண்ணீர் திறந்து விடப்படும்.

ஆனால் இந்த ஆண்டு அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் நாளை (12-ந் தேதி) மேட்டூர் அணை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் இந்த ஆண்டும் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு காலதாமதம் ஆகும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் பருவமழை தாமதமாக தொடங்கியதால் மேட்டூர் அணையில் இருந்து ஜூலை மாதம் 19-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக - கர்நாடக எல்லையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இதனால் கடந்த 3 மாதத்திற்கு மேலாக வறண்டு வெறும் பாறைகளாக காட்சியளித்த காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின்அருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து ருகின்றனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 919 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 930 கனஅடியாக அதிகரித்தது.

இன்று காலை இதுகுறைந்து 861 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு சற்று கூடுதலாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 45.63 அடியிலிருந்து 45.59 அடியாக குறைந்து உள்ளது.

தற்போது கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கர்நாடகத்தில் முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

தொடர்ந்து மழை பெய்து அணை நீர்மட்டம் உயரும் பட்சத்தில், இந்த அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான சூழல் நிலவி வருகிறது.

Tags:    

Similar News