செய்திகள்
மேட்டூர் அணையில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் குழு ஒகேனக்கல், மேட்டூர் அணையில் ஆய்வு

Published On 2019-06-11 03:26 GMT   |   Update On 2019-06-11 03:26 GMT
மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் குழு ஒகேனக்கல்,மேட்டூர் அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டது.
மேட்டூர்:

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், காவிரி ஒழுங்காற்று குழு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக நதி நீர் அளவீடு பிரச்சினைக்கு தீர்வு காணும்படி, காவிரி ஒழுங்காற்று குழு தனது துணைக்குழுவுக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் இடம்பெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் துணைக்குழு கண்காணிப்பு பொறியாளர் மோகன்முரளி தலைமையில் ஆய்வு பணிகளை தொடங்கியது. முதற்கட்டமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி ஆற்று படுகைகளில் எங்கெங்கு தானியங்கி நீர் அளவீடு செய்யும் மானிகளை பயன்படுத்துவது என்பது குறித்து இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த குழுவில், கண்காணிப்பு பொறியாளர்கள் ஜெயகோபால், ரமேந்திரா, சுரேஷ், கேரள மாநிலம் ஆழியாறு துணை இயக்குனர் சஞ்சய்குமார், விஞ்ஞானி அமுதா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த குழு தமிழகத்தில் மேட்டூர் அணையில் ஆய்வு செய்திட நேற்று மாலை வந்தது. அணையின் இடதுகரை கவர்னர் பாயிண்ட், அனல்மின்நிலையம், சுரங்கமின்நிலையம் ஆகிய இடங்களை இந்த குழுவினர் பார்வையிட்டனர்.

இந்த இடங்களை பார்வையிட்ட பிறகு கண்காணிப்பு பொறியாளர் மோகன்முரளி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘காவிரி ஆற்று படுகையில் தானியங்கி நீர் அளவீடு செய்யும் மானி எங்கெங்கு அமைக்கலாம் என தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆய்வு செய்து இந்த மாத இறுதிக்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்’ என்றார்.

மேட்டூர் அணையை தொடர்ந்து இந்த குழுவினர் பவானிசாகர், அமராவதி அணைகளை இன்று(செவ்வாய்க்கிழமை) பார்வையிடுகிறார்கள்.

முன்னதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியிலும், ஒகேனக்கல்லிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 45.63 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 930 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 
Tags:    

Similar News