செய்திகள்

நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூடலூர்- கேரள எல்லையில் கலெக்டர் ஆய்வு

Published On 2019-06-07 18:02 GMT   |   Update On 2019-06-07 18:02 GMT
கூடலூர்- கேரள எல்லையில் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஆய்வு நடத்தினார்.
கூடலூர்:

கேரள மாநிலம் எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் கேரள சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதேபோல் தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க சுகாதாரத்துறை மூலம் மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகா கேரள மாநில எல்லையில் உள்ளது. இது தவிர அடர்ந்த வனங்களும் உள்ளதால், நிபா வைரசை பரப்பும் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் நோய் பரவவும் அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இதையொட்டி நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பொற்கொடி மேற்பார்வையில் நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு ஆகிய பகுதிகளில் உள்ள 7 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர். மேலும் சுற்றுலா வரும் பயணிகளிடம் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்கள் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வாறு நோய் தாக்கம் இருந்தால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர்- கேரள எல்லையில் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஆய்வு நடத்தினார். நாடுகாணி நுழைவு வரி சோதனைச்சாவடிக்கு வந்த கலெக்டர், சுற்றுலா பயணிகளுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் கார்களில் வந்த சுற்றுலா பயணிகளிடம் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என கேட்டார். இதேபோல் எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுகாதாரதுறையினர் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரள எல்லைகளில் உள்ள 7 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மூலம் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக டாக்டர், ஆய்வாளர்கள், செவிலியர்கள் கொண்ட தனிக்குழு செயல்பட்டு வருகிறது. காய்ச்சல், இருமல், வயிற்றுவலி உள்பட பல்வேறு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் சென்று சிகிச்சை பெற வேண்டும். ரம்ஜான் பண்டிகை முடிந்து நீலகிரிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதால் சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையின் மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது. பறவைகள், வவ்வால்கள் தின்ற பழங்களை மனிதர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. சாலையோரம் விற்கும் பழங்களையும் வாங்கக்கூடாது. பழங்களை கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள் சாப்பிடுவதற்கு முன்பாக தங்களது கைகளை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஆர்.டி.ஓ. ராஜ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், சுகாதார மேற்பார்வையாளர் தருமலிங்கம், டாக்டர் புரூஸ் மற்றும் அலுவலர்கள், சுகாதாரத்துறையினர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News