செய்திகள்

ஏழை தையல் தொழிலாளி மகளின் மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்ற தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2019-06-07 16:33 GMT   |   Update On 2019-06-07 16:33 GMT
நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழை தையல் தொழிலாளர் மகள் மாணவி ஜீவிதாவின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்பதாக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
சென்னை:

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், அரசுப் பள்ளியில் படித்த ஜீவிதா என்ற மாணவி, 605 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். சென்னையை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த தையல் தொழிலாளியின் மகளான ஜீவிதாவுக்கு, அரசு கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தாலும், கட்டணம் செலுத்தும் அளவிற்கு அவர்களிடம் வசதி இல்லை. இது தொடர்பாக செய்தி வெளியானது.

இதனை அறிந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அந்த மாணவியின் கல்விச் செலவை ஏற்பதாக கூறியுள்ளார்.

இதுபற்றி தமிழ்சை சவுந்தரராஜன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஏழை தையல் தொழிலாளர் மகள் ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன். 

ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவ கனவு நனவாகட்டும்...மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News