செய்திகள்

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2019-06-05 16:04 GMT   |   Update On 2019-06-05 16:04 GMT
தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை:

கேரளாவில் கடந்த ஆண்டு மே மாதம் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தாக்கியது. கோழிக்கோடு மாவட்டத்தில் 14 பேரும், அதன் அருகில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் 3 பேரும் என மொத்தம் 17 பேர் இந்த நோய் தாக்கியதால் பலியானார்கள்.

பழந்தின்னி வவ்வால்கள் மூலம் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. வவ்வால்கள், அணில்கள் ஆகியவை கடித்துப்போடும் பழங்களை எடுத்து சாப்பிடும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இந்நோய் பரவுவதாக தெரிய வந்துள்ளது.

இந்த நோய் தாக்கியவர்களுக்கு கடுமையான காய்ச்சல், தசை வலி, தலைவலி, வாந்தி, தொண்டை வலி, தலை சுற்றல் போன்ற அறிகுறிகளுடன் மூளை வீக்கம் போன்ற நரம்பியல் பிரச்சினைகளும் ஏற்படும். கடுமையான பாதிப்பு ஏற்பட்டவர்கள், கோமா நிலையை அடைவார்கள். இறுதியில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் மீண்டும் தாக்கி உள்ளது. தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் 6 பேர் அடங்கிய மத்திய குழு, கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதால் பழங்களை நன்கு கழுவி சாப்பிடவேண்டும்.  தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கேரள எல்லையில் உள்ள 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News