செய்திகள்

இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்

Published On 2019-06-02 10:13 GMT   |   Update On 2019-06-02 10:13 GMT
இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா?
சென்னை:

இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால்1937-ம் ஆண்டு முதல்முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.

அதை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும் ஈ.வே.ரா. பெரியாரும் மூன்றாண்டுகள் உண்ணாவிரதம், மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்களை நடத்தினர்.

அந்நாள் அரசின் காவல்துறை நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர். பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் அரசு 1939-ம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாணத்தின் பிரிட்டன் அரசின் ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' 1940-ம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு அரசியலமைப்பு சட்டமன்றத்தில் புதிய இந்தியக் குடியரசில் நிலவ வேண்டிய அலுவல்மொழி குறித்து நீண்ட விவாதம் நடந்தது. பற்பல உரையாடல்களுக்குப் பின்னர் தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி அரசுப்பணி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல்மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

புதிய இந்திய அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 அன்று நடப்பிற்கு வந்தது. ஆகவே அரசியலமைப்பில் ஏற்றுக்கொண்டபடி 1965 ஆண்டிலிருந்து இந்தி மட்டுமே அரசுப்பணிமொழியாக விளங்க அரசு மேற்கோண்ட முயற்சிகள் இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பலைகளை உண்டாக்கின. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த எதிர்ப்பில் முன்னணியில் இருந்தது.

இந்தக் கவலைகளை நீக்கும் விதமாக அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1963-ம் ஆண்டில் கொண்டு வந்த அரசுப்பணிமொழி சட்டத்தில் 1965ஆம் ஆண்டிற்குப் பிறகும் ஆங்கிலமே அரசுமொழியாக விளங்கிட வழிவகை செய்தார்.

இதை தொடர்ந்து 23-1-1968 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், 1986-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இந்தக் கொள்கை நாடெங்கிலும் நவோதயா பள்ளிகள் நிறுவிட வழி செய்தது. திமுக இப்பள்ளிகளில் இந்தி கற்பது கட்டாயமாக்கப்படும் என்று கூறியது.

அந்த நேரம் திமுகவிலிருந்து பிரிந்து உருவான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்தார். திமுக முதன்மை எதிர்க்கட்சியாக இருந்தது. தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி போராட்டம் துவக்கினார். நவம்பர் 13 அன்று மாநில சட்டப்பேரவை ஒருமனதாக அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியை நீக்கவும் ஆங்கிலத்தை ஒன்றியத்தின் ஒரே அலுவல்மொழியாக அங்கீகரிக்கவும் தீர்மானம் இயற்றியது.

17-11-1986 அன்று திமுக உறுப்பினர்கள் கல்விக் கொள்கைக்கெதிராக அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியை தீயிட்டு கொளுத்தினர். இந்தி திணிப்பு சட்டநகல் எரிப்பு போராட்டம் என்றழைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் கருணாநிதி உட்பட சுமார் 20 ஆயிரம் திமுக தொண்டர்கள் கைதாகினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 21 பேர் தம்மைத்தாமே தீயிட்டு கொளுத்திக்கொண்டு உயிர் நீத்தனர்.

பின்னர்,  இந்தி கட்டாயமாக்கப்படாது என்று தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ராஜீவ் காந்தி வாக்குறுதி கொடுத்தார். இதன் பின்னணியில் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது, நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமேயாகும்

இந்நிலையில், மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு தற்போது புதிய கல்விக் கொள்கையை பரிந்துரைத்துள்ளது.

அதில் அனைத்து மாநிலங்களும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இந்தி பேசாத மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்குமா? என்ற நிலை இங்கு தலைதூக்க தொடங்கியுள்ளது.



இதற்கிடையில், இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய முன்னோடியாக திகழ்ந்து மறைந்த ‘சொல்லின் செல்வர்’ ஈ.வே.கி. சம்பத் முன்னர் 1960-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகித்தபோது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாக அவருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

‘மத்திய அரசின் மொழி கொள்கை தொடர்பாக முன்னர் பாராளுமன்ற மக்களவையில் அளித்த வாக்குறுதிக்கு மாறான நிலைப்பாட்டை ஒருநாளும் எடுக்க மாட்டோம். எனது வாக்குறுதி தொடர்பாக, ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் மக்களவையில் உரையாற்றிய உள்துறை மந்திரியும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

சென்னை அரசின் நிதிமந்திரியும் இதுதொடர்பாக தெளிவுப்படுத்தி இருப்பதாக அறிந்தேன். எனவே, இவ்விவகாரத்தில் பாராளுமன்றத்தின் மாண்புமிகு உறுப்பினரான தங்களுக்கு எவ்வித ஐயப்பாடும் தேவையில்லை. தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் இந்த அரசு உறுதியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என முன்னர் ஈ.வே.கி. சம்பத்துக்கு அனுப்பிய கடிதத்தில் நேரு குறிப்பிட்டிருந்தார்.
Tags:    

Similar News