செய்திகள்

நாங்குனேரி சட்டசபை தொகுதிக்கு ஆகஸ்டு மாதம் இடைத்தேர்தல்

Published On 2019-06-01 07:42 GMT   |   Update On 2019-06-01 07:42 GMT
காலியாக உள்ள நாங்குனேரி சட்டசபை தொகுதிக்கு ஆகஸ்டு மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.

வசந்தகுமாரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால் இதுகுறித்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு முறைப்படி தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் நாங்குனேரி தொகுதி காலி தொகுதியாக தேர்தல் கமி‌ஷனால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டாலும் தேர்தல் கமி‌ஷன் விதிப்படி 6 மாதத்துக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் ஆகஸ்டு மாதம் நாங்குனேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதிக்கும் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

நாங்குனேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுடன் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News