செய்திகள்

கூடலூர் அருகே வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானை - கிராம மக்கள் அச்சம்

Published On 2019-05-24 12:32 GMT   |   Update On 2019-05-24 12:32 GMT
கூடலூர் அருகே இரவில் வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கூடலூர்:

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே மரப்பாலம் சீனக்கொல்லி கிராமத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு காட்டு யானை நுழைந்தது.

பின்னர் அது பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அவசர தேவைகளுக்காக வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் இரவு முழுவதும் அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை அங்கு பயிரிட்டு இருந்த வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை நேற்று விடியற்காலையில் வனப்பகுதிக்கு சென்றது. அதன்பின்னரே கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவதால் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்பு மேற்கொண்டு காட்டு யானை வராமல் தடுக்க வேண்டும் என்றனர்.

இதேபோல் கூடலூர் ஹெல்த்கேம்ப், அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் தினமும் இரவு காட்டு யானை வந்து வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

சில சமயங்களில் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் காட்டு யானை நின்று வருகிறது. இன்னும் 1 வாரத்தில் பள்ளிக்கூடம் திறக்க உள்ள நிலையில் காட்டு யானை வருகையால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே வனத்துறையினர் காட்டு யானை வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெல்த்கேம்ப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News