செய்திகள்

லஞ்சம் வாங்கி கைதான ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் சேலம் சிறையில் அடைப்பு

Published On 2019-05-23 09:29 GMT   |   Update On 2019-05-23 09:29 GMT
பேக்கரி கடைக்காரரிடம் லஞ்சம் வாங்கி கைதான ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சேலம் மெயின் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருபவர் சரவணன். இவரது கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததாக கூறி ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றார். சரவணன் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் நடராஜன் ரூ.70 ஆயிரம் லஞ்சம் தருமாறு கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து சரவணன் ரூ.30 ஆயிரத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் கொடுக்க முயன்றார். அந்த தொகையை தான் பெற மாட்டேன் என்றும், ரூ.70 ஆயிரம் தான் தர வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் நடராஜன் கூறினார். ஆனால் ரூ.70 ஆயிரம் கொடுக்க விரும்பாத சரவணன் இது குறித்து கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.70 ஆயிரத்தை சரவணன், நேற்று மாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று இன்ஸ்பெக்டர் நடராஜனை லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடந்தது. கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே சேலத்தை அடுத்து உள்ள தாசநாயக்கன் பட்டி லட்சுமி நகரில் உள்ள இன்ஸ்பெக்டர் நடராஜன் வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான போலீசார் நேற்று மாலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதில்முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News