செய்திகள்

பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

Published On 2019-05-23 02:06 GMT   |   Update On 2019-05-23 02:06 GMT
பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.
சென்னை :

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் ஆகியவை சார்பில் சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் (பயோலாஜிக்கல் டைவர்சிட்டி) சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் தலைவர் ஏ.கே.ஜெயின் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தேசிய பல்லுயிர் பெருக்க செயல் திட்டம், நிதி திட்டம் மற்றும் விருதுகள் பெறுவதற்கான தகவல்கள் அடங்கிய கையேடு ஆகியவற்றை வெளியிட்டார்.

இதையடுத்து வெங்கையா நாயுடு பேசியதாவது:-

சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய கவலை ஏற்படுவது நம் நாட்டுக்கு புதிதல்ல. 2,200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை ஆண்ட பேரரசர் அசோகரின் ஆட்சிக்காலத்திலேயே, விளையாட்டுக்காக வேட்டையாடுதல் மற்றும் வனப்பகுதிகளை எரிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. முதன் முறையாக அரச பிரகடனத்தின் மூலம், பாலூட்டிகள், பறவைகள் மற்றும் மீன் போன்றவற்றுக்காக பாதுகாக்கப்பட்ட புகலிடங்கள் முறைப்படி உருவாக்கப்பட்டன.

அசோக பேரரசின் ஸ்தூபிதான் தற்போது இந்தியாவின் தேசிய சின்னமாக திகழ்கிறது. அதில் இடம் பெற்றுள்ள நான்கு சிங்க முகங்கள், அதிகாரம், துணிச்சல், கவுரவம் மற்றும் நம்பிக்கை ஆகிய நான்கு அம்சங்களை பிரதிபலிக்கின்றன. அத்துடன் இந்த சின்னத்தில் இடம் பெற்றுள்ள முழுமையாக மலர்ந்த தாமரை, வாழ்வியல் மற்றும் ஊக்க சிந்தனையின் ஊற்றுக்கண்ணாகவும் திகழ்கிறது.

அனைத்து மதங்களும், மனிதர்களிடையேயான ஒற்றுமை மற்றும் இயற்கையை பற்றி போதிக்கின்றன. தொழில்மயமாகி வரும் உலகில் இயற்கை வளங்களுக்கு தற்போது கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுவதால் மரங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன.

2001 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் சுமார் 16 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட பரப்பிலான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகளும், அரிய வகை தாவர இனங்களும் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் கடந்த 100 ஆண்டுகளில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயிர் வகைகள் வயல்வெளிகளில் இருந்து இல்லாமல் போய் விட்டது.

இதனால் கோடிக்கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது தற்போதைய உணவு வினியோக முறை 80 சதவீதம் அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சிறு தானியங்கள் போன்ற குறிப்பிட்ட சில பயிர்களை சார்ந்தே இருக்கிறது.

உள்நாட்டு விலங்கின உற்பத்தியும் பாதியாக குறைந்ததோடு, மீன்பிடி தொழிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேளாண் உயிரி பன்முகத்தன்மை மற்றும் அதனுடன் சார்ந்த நமது பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான அறிவும் வீழ்ச்சியடைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட நமது பாரம்பரிய உணவு பழக்க வழக்கம் உடலுக்கு ஆரோக்கியமானது என்பதோடு சமச்சீரான ஊட்டச்சத்தை வழங்குவதாக இருந்தது. எனவே பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மக்கள் நலன் சார்ந்தவையாக அமைய வேண்டும். இயற்கையை அரவணைத்து சென்றால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிறைவாக கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அரசு கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா நன்றியுரை நிகழ்த்தினார்.

விழாவில் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் செயலாளர் பூர்வஜா ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிகர் உள்பட மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக ‘ட்ரீ ஆம்புலன்சு’ என்ற அரசு சாரா அமைப்பு சார்பில் மரங்களுக்கு என்று பிரத்தியேகமாக முதல் கட்டமாக தொடங்கப்பட்ட ஆம்புலன்சு சேவையை வெங்கையா நாயுடு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து இந்தியாவின் பசுமை மனிதன் என்று அழைக்கப்படும் ட்ரீ ஆம்புலன்சு’ அமைப்பின் நிறுவனர் டாக்டர் கே.அப்துல் கனி கூறும்போது, மரங்களை பாதுகாப்பதற்கான முதல் உதவி அளித்தல், மரம் நடுதல், மரங்களை இடம் மாற்றி நடுதல், விதைப்பந்துகள் மூலம் புதிய மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளுக்கும், மரங்களை பாதுகாத்து, வனப்பரப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்குவதற்காக மரங்களுக்கான ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆம்புலன்சில் செடி, கொடி பற்றிய நிபுணர்கள், தோட்டக்கலை உபகரணங்கள் உடன் உதவியாளர்கள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துடன் பயணம் செய்வார்கள் என்றார்.
Tags:    

Similar News