செய்திகள்

கோவில்பட்டி அருகே குளத்துக்குள் இறங்கி பெண்கள் போராட்டம்

Published On 2019-05-21 14:01 GMT   |   Update On 2019-05-21 14:01 GMT
ஆவல்நத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான குளத்தில் கரம்பை மண் அள்ளாமல் முறையாக அள்ள வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி குளத்துக்குள் இறங்கி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவல்நத்தம் ஊராட்சியில் ஆவல்நத்தம், நாரணபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் ஆவல்நத்தம் கிராம மக்கள் அங்குள்ள குளத்துக்குள் இறங்கி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆவல்நத்தம் பகுதி மக்களுக்கு மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சீராக குடிநீர் வழங்க வேண்டும். ஆவல்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே ஊராட்சி ஒன்றிய நிதி ரூ.1 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்கு கைப்பம்பு உடனடியாக அமைக்க வேண்டும். பழுதடைந்த குழாயை செப்பனிட வேண்டும்.

ஆவல்நத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான குளத்தில் ஒரே இடத்தில் கரம்பை மண் அள்ளாமல் முறையாக அள்ள வேண்டும். குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் குளத்துக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கரம்பை மண் அள்ளும் பணியை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் சங்கரேஸ்வரி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து வட்டாட்சியர் பரமசிவன் சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் கைப்பம்பு இரு தினங்களில் அமைக்கப்படும். குளத்தில் கரம்பை மண் அள்ளுவதை முறையாக கண்காணித்து சமப்படுத்தப்படும் என கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Tags:    

Similar News